செய்திகள்
சசிகலா

போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் புதிய சொகுசு வீட்டை சசிகலா பார்வையிட்டார்

Published On 2021-04-11 08:35 GMT   |   Update On 2021-04-11 08:35 GMT
ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லத்திற்கு அருகிலேயே சசிகலாவுக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய சொகுசு வீடு கட்டப்பட்டு வருகிறது.

சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தண்டனை காலம் முடிந்ததும் சசிகலா கடந்த ஜனவரி இறுதியில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் சென்னை திரும்பிய அவர் தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இருந்த வரை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில்தான் சசிகலா தங்கி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லத்திற்கு அருகிலேயே சசிகலாவுக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய சொகுசு வீடு கட்டப்பட்டு வருகிறது.

அந்த வீட்டை சசிகலா, விவேக், இளவரசி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று பார்வையிட்டனர்.

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உள்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதைதொடர்ந்து சசிகலா தரப்பினர் 2003 முதல் 2005-ம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர். அதில் சசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டன.

பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் தற்போது போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News