செய்திகள்
கோப்புப்படம்

திருவாரூரில் விடுதியில் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல்

Published On 2021-03-10 17:59 GMT   |   Update On 2021-03-10 17:59 GMT
திருவாரூரில் உரிய ஆவணங்கள் இன்றி விடுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 12 பறக்கும் படை குழுக்களும், 12 நிலை கண்காணிப்புக்குழுக்களும் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி பார்வையில் 14 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தங்கும் விடுதியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பணத்துடன் தங்கி இருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்மந்தபட்ட விடுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு தங்கியிருந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் நிவாஸ் என்பவரிடம் எந்த ஆவணங்களும் இன்றி ரூ.3 லட்சம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் திருவாரூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான நக்கீரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News