செய்திகள்
கபிலன்

கமுதி அருகே ஊஞ்சல் ஆடியபோது கழுத்தில் சேலை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

Published On 2021-02-25 09:21 GMT   |   Update On 2021-02-25 09:21 GMT
ஊஞ்சல் ஆடியபோது கழுத்தில் சேலை இறுக்கியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்துள்ள விலக்கனேந்தலை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் கபிலன் (வயது14). இவன் அபிராமம் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி இவன் அடிக்கடி விளையாடுவது வழக்கம். இதேபோல் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி உள்ளான்.

இவனது தாய் மகேசுவரி அபிராமம் சந்தைக்கு பொருட்கள் வாங்க சென்றிருந்தார். தனது தாய் பார்த்தால் திட்டுவார் என்று கதவை பூட்டிக்கொண்டு சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடி உள்ளான்.

அப்போது எதிர்பாராதவிதமாக, சேலை கழுத்தில் இறுக்கி உள்ளது. எவ்வளவு முயன்றும் அதை எடுக்க முடியாததால் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

சந்தைக்கு சென்று விட்டு திரும்பிய சிறுவனின் தாய் மகேசுவரி வந்து, கதவை தட்டியும் திறக்காததால் சிறிதுநேரம் வாசலிலேயே அமர்ந்து விட்டார்.

பின்னர் சந்தேகமடைந்த அவர் தனது தந்தை குமரவேலுவை உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். பின்னர் ஓட்டை பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கி பார்த்தபோது சிறுவன் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிறுவனின் உடலை கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News