செய்திகள்
கோப்புபடம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் - 250 பேர் மீது வழக்கு

Published On 2021-02-22 12:30 GMT   |   Update On 2021-02-22 12:30 GMT
திருச்சிற்றம்பலம் அருகே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதுதொடர்பாக 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சிற்றம்பலம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நேற்று மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ஏனாதி. பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கணக்கான தி.மு.க. இளைஞர் அணியினர், கலந்து கொண்டனர்.

காலகம், கொன்றைக்காடு, ஆண்டவன் கோவில் வழியாக சென்று பேராவூரணியில் ஊர்வலம் நிறைவடைந்தது. இதில் மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ்ஜெயபிரகாஷ், ஒன்றிய பொறுப்பாளர்கள் இளங்கோவன், அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஊர்வலம் நடத்துவதற்கு உரிய அனுமதியை பெறவில்லை எனக்கூறி, தி.மு.க. இளைஞர் அணி பொறுப்பாளர்கள் உள்பட 250 பேர் மீது திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஆலடிக்குமுளை கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஏனாதி பாலு தொடங்கி வைத்தார். தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆதி ராஜேஷ் தலைமையில் நடந்த ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக சென்று பட்டுக்கோட்டை பெரியார் சிலை அருகே முடிவடைந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாதுரை, நகர தி.மு.க.பொறுப்பாளர் செந்தில்குமார், தி.மு.க. பேச்சாளர் மணிமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News