செய்திகள்
ரெயில்

ரெயில்களில் ஜூன் மாதம் முதல் முன்பதிவு இல்லா பெட்டிகளுக்கு அனுமதி?

Published On 2021-02-21 05:12 GMT   |   Update On 2021-02-21 05:12 GMT
ஜூன் 1-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்ட பொதுப்பெட்டிகள் மீண்டும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்டதாக மாற்றப்பட்டு முன்பதிவு செய்து டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து தினசரி இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் சிறப்பு ரெயில்களாகவே இயக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் இன்னும் வழக்கமான ரெயில்களாக இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வரவில்லை.

தென்னக ரெயில்களில் வழக்கமான ரெயில்கள் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. தமிழக அரசு முழு அளவில் ரெயில்களை இயக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்து விட்டது. ஆனாலும் முழு அளவில் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

முன்பதிவு இல்லாத பெட்டிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வார்கள். இப்போது அதுவும் முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்டு விட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கட்டண பிரச்சனை மட்டுமில்லாமல் தினசரி பொதுப்பெட்டியில் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

சில மண்டலங்களில் ஜூன் மாதம் முதல் இந்த பெட்டிகளுக்கான முன்பதிவு ஐ.ஆர்.சி.டி.சி. போர்ட்டலில் நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றுவதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்ட பொதுப்பெட்டிகள் மீண்டும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News