செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

போடி அருகே கேரளாவுக்கு ஐம்பொன் நடராஜர் சிலையை கடத்த முயற்சி- 4 பேர் கைது

Published On 2021-02-14 09:31 GMT   |   Update On 2021-02-14 09:31 GMT
போடி அருகே ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி போஜன்பூங்கா பகுதியில் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக ஒரு கார் வந்தது. போலீசார் அதனை நிறுத்த முயன்ற போது நிற்காமல் வேகமாக சென்றது.

அதனை விரட்டிச் சென்று போலீசார் மடக்கினர். காரில் இருந்து 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் போடி சண்முக சுந்தரபுரத்தைச் சேர்ந்த மோகன் மகன் மணிகண்டன் (26) என தெரிய வந்தது. காரில் சோதனை நடத்திய போது நின்ற நிலையில் உள்ள நடராஜர் சிலை இருந்தது. 3 அடி உயரம், 10 கிலோ எடை கொண்ட இந்த சிலை 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இந்த சிலையை ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தகோவில் பகுதியில் இருந்து மணிகண்டன் வாங்கி வந்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

சிலையை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனையும் கைது செய்தனர். அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு மற்ற 3 பேரையும் தேடி வந்தனர். தமிழன், தங்கபாண்டி, முத்துவர்மன் ஆகியோரையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் எங்கிருந்து சிலையை வாங்கினர்? எங்கே விற்க முயன்றனர்? இந்த கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News