செய்திகள்
புதிய நாடக மேடை அமைப்பதற்கான பூமிபூஜை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

பயிர் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் பாஸ்கரன்

Published On 2021-02-12 10:43 GMT   |   Update On 2021-02-12 10:43 GMT
பயிர் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று கல்லல் அருகே நடந்த விழாவில் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
கல்லல்:

காரைக்குடியை அடுத்த கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்யலூர் ஊராட்சி கூத்தலூர் மற்றும் வாரிவயல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

வாரிவயல் கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50லட்சம் மதிப்பீட்டில் நாடகமேடை கட்டுவதற்கான பூமி பூஜைக்கு அமைச்சர் பாஸ்கரன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். பொங்கல் விழாவை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

தற்போது விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி உள்ளார். அதேபோல் இந்த பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கூட்டுக் குடிநீர்த்திட்டம் செயல்படுத்த உத்தரவிட்டு தற்போது அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் காவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டமும் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு காரணம் அவர் சாதாரணமான ஒரு விவசாயியாக இருந்து முதல்-அமைச்சராக வந்துள்ளதால் ஏழ்மையில் உள்ளவர்களின் கஷ்டம் என்ன என்பது அவருக்கு நன்றாக தெரிந்துள்ளது. அதனால்தான் இந்தியாவில் எந்தவொரு முதல்-அமைச்சரும் செய்யாத திட்டமான குடிமராமத்து திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்து இன்று தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கண்மாய்களில் தண்ணீர் தேங்கி விவசாயம் செழித்துள்ளது. இதற்கு அவர் தான் முதல் காரணமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், ஆவின் தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பொன் மணிபாஸ்கரன், துணைத்தலைவர் சரஸ்வதி, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபரமேஸ்வரி, உதவி பொறியாளர் வீரப்பன், தேவபட்டு ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார், ஒன்றிய மேற்பார்வையாளர் சகுந்தலா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News