செய்திகள்
கோப்புபடம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 2-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் - 93 பேர் கைது

Published On 2021-02-04 14:41 GMT   |   Update On 2021-02-04 14:41 GMT
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 93 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் காலியாக உள்ள 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நேற்றும் 2-வது நாளாக தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே 2-வது நாளாக நேற்று காலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், நிர்வாகிகள் ஏகாம்பரம், பார்த்திபன், சிவக்குமார், ராஜாராம், கணேசன், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. மதியம் 12 மணி அளவில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட துணைத்தலைவர் வீரபத்திரன், மாவட்ட இணை செயலாளர் சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மகாலிங்கம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்.

இதில் சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சாவித்ரி, தமிழ்நாடு அரசு சாலை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் முத்து, கிராம செவிலியர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 43 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News