செய்திகள்
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள உரக்கிடங்கில் உள்ள குப்பைகள்

உரக்கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகள் ஜூன் மாதத்திற்குள் தரம்பிரிக்கப்படும்- மாநகராட்சி ஆணையர்

Published On 2021-01-25 03:35 GMT   |   Update On 2021-01-25 03:35 GMT
தஞ்சை ஜெபமாலைபுரம் உரக்கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகள் ஜூன் மாதத்திற்குள் தரம் பிரிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் கூறினார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த 51 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள உரக்கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படும். தற்போது தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக 51 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என உடனடியாக தரம் பிரித்து அவற்றை நுண்ணுரமாக்கும் திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 14 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக ஜெபமாலைபுரம் உரக்கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு கழிவுகள் சிமெண்டு ஆலைகளுக்கும், உரம் தயாரிப்பதற்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரத்தின் தரம், கழிவுகளின் தன்மை குறித்து சான்று அளிக்கப்படுகிறது.

அதன்படி இந்த உரக்கிடங்கில் 2 லட்சத்து 30 ஆயிரம் கனமீட்டர் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதில் இதுவரை 30 ஆயிரம் கன மீட்டர் வரை குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடகிழக்குப்பருமழை தொடர்ந்து பெய்ததால் இந்த பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் பணிகள் மீண்டும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை கண்மணி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது உதவி பொறியாளர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் கூறுகையில், ‘‘தஞ்சை மாநகராட்சி குப்பைக்கிடங்கில் கிடந்த 2 லட்சத்து 30 ஆயிரம் கனமீட்டரில் 30 ஆயிரம் கனமீட்டர் வரை தரம் பிரிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 2 லட்சம் கனமீட்டர் குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றை தரம் பிரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கி அவை உடனுக்குடன் நுண்ணுரமாக்கப்பட்டு வருகின்றன. பொது மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளித்து குப்பைகளை தரம் பிரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’என்றார்.
Tags:    

Similar News