செய்திகள்
தற்கொலை

திருமண நாளில் புத்தாடை எடுக்க முடியாததால் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை

Published On 2021-01-21 03:54 GMT   |   Update On 2021-01-21 03:54 GMT
அஞ்சுகிராமம் அருகே திருமண நாளில் புத்தாடை எடுக்க முடியாததால் காங்கிரஸ் பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் காணிமடத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது33). இவர் அஞ்சுகிராமத்தில் செல்போன் கடை நடத்தி வந்தார். மேலும், நகர காங்கிரஸ் வர்த்தகர் அணி தலைவராகவும் இருந்தார்.

இவருடைய மனைவி அஞ்சுகிராமம் பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உண்டு. முருகனின் கடையில் கடந்த ஒரு ஆண்டாக சரியாக வியாபாரம் நடைபெறவில்லை எனத்தெரிகிறது. இதனால், அவர் போதிய வருமானம் இன்றி தவித்தார்.

இன்று (வியாழக்கிழமை) அவர்களுக்கு திருமண நாள் என தெரிகிறது. இதனை கொண்டாட மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்க பணம் இல்லையே என்று மன வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று காலையில் மாடிக்கு சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த மனைவி மாடிக்கு சென்று பார்த்தபோது முருகன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருமண நாளில் புத்தாடை எடுக்க முடியாததால் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News