செய்திகள்
வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு- மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள்

Published On 2021-01-20 05:31 GMT   |   Update On 2021-01-20 05:31 GMT
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான சுருக்க திருத்த பணிகள் நிறைவடைந்தன. இதுவரை பெயர் சேர்ப்பதற்கோ, திருத்துவதற்கோ, இடம் மாறியதற்காகவோ விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி டிசம்பர் 15-ம் தேதி முதல் நடந்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் 3.08 கோடி ஆண் வாக்காளர்கள், 3.18 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். 7,246 மூன்றாம் பாலித்தனவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 6.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 1.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News