செய்திகள்
டாக்டர் வி.சாந்தாவின் உடல்தகனம் அரசு மரியாதையுடன் நடைபெற்ற போது எடுத்தபடம்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா மரணம் - அரசு மரியாதையுடன் உடல் தகனம்

Published On 2021-01-19 22:01 GMT   |   Update On 2021-01-19 22:01 GMT
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி.சாந்தா மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சென்னை:

சென்னை, அடையாறில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.சாந்தா இருந்து வந்தார். 93 வயதான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இதயநோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு டாக்டர் வி.சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.



இந்நிலையில் நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார். புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் டாக்டர் வி.சாந்தா. அவர், தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் தமிழக அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகளை பெற்றுள்ளார்.



டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று காலை வைக்கப்பட்டிருந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ம.சுப்பிரமணியன், சந்திரசேகர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அரசு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதாஷேசைய்யன். சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ்,

பா.ஜ.க. அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், அப்பல்லோ மருத்துவமனை துணைத்தலைவர் பிரித்தா ரெட்டி, நடிகர்கள் விவேக், சித்தார்த், முன்னாள் எம்.பி.க்கள் மைத்ரேயன், டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன், முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், துரை வைகோ, டாக்டர் கமலா செல்வராஜ், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், நோய் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் மலர்வளையம், மலர்மாலைகளை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 4 மணி அளவில் டாக்டர் வி.சாந்தாவின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயான சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு டாக்டர் வி.சாந்தாவின் தம்பி மகன் சுரேஷ் இறுதி சடங்குகளை செய்தார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதின் படி 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

டாக்டர் வி.சாந்தா 1927-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் அவருடைய சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயமாகும். 1949-ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். 1952-ம் ஆண்டு டி.ஜி.ஓ. என்ற குழந்தைகள் சிகிச்சைக்கான மருத்துவ கல்வி, 1955-ம் ஆண்டு எம்.டி. படித்த உடன் சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்ந்தார். பின்னர் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மற்றும் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவர். குறிப்பாக 67 ஆண்டுகள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்காக சேவையாற்றி உள்ளார்.

இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மருத்துவர் சாந்தாவின் குடும்ப உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் வி.சாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரம் வரை பணியாற்றிக்கொண்டிருந்தார் என அவருடன் பணிபுரிந்தவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News