செய்திகள்
கோப்புபடம்

எம். சவேரியார்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் - வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரிக்கை

Published On 2021-01-18 14:26 GMT   |   Update On 2021-01-18 14:26 GMT
தூத்துக்குடி எம்.சவேரியார்புரத்தில் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில், எம். சவேரியார்புரம், கெபிதெரு, கோவில் தெரு, அம்மன் கோவில் வடக்கு தெற்கு தெருக்கள், மகாலட்சுமி நகர் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால், வீடுகளை சுற்றி குளம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.. இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்து, வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பல வீடுகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்தது. இதனால் சமையல் கூட செய்ய முடியாத அளவு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கடந்த 5 நாட்களாக மழை நீர் தேங்கிய பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக தேங்கிய மழைநீரை அகற்ற கோரியும், அந்தப் பகுதி மக்கள் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் எம். சவேரியார் புரத்தில் நேற்று காலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு, முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா பண்டியன் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ,் மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மழைநீரை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் அந்தோணியார் கோவில் வளாகத்தின் முன்பு தேங்கிய மழை நீரை அந்த ஊர் மக்கள் வாகனங்கள் மூலம் வெளியேறி வருகின்றனர்.

Tags:    

Similar News