செய்திகள்
கோப்புப்படம்

காணும் பொங்கல் தினத்தன்று ரூ.172 கோடிக்கு மது விற்பனை

Published On 2021-01-17 20:10 GMT   |   Update On 2021-01-17 20:10 GMT
காணும் பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் ரூ.171 கோடியே 87 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டை விட இது சற்று குறைவானது என்பது குறிப்பிடததக்கது.
சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்கும். அந்த வகையில் கடந்த 13-ந் தேதி (போகி பண்டிகை) தமிழகத்தில் ரூ.147 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை ஆகி இருந்தது. அதேபோல், கடந்த 14-ந் தேதி (பொங்கல் தினத்தன்று) 269 கோடியே 43 லட்சத்துக்கு விற்பனை ஆனது.

கடந்த ஆண்டை விட பொங்கல் தினத்தன்று விற்பனை அதிகமாக இருந்தாலும், போகி பண்டிகையை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.30 கோடி வரையில் விற்பனை குறைந்திருந்தது. போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாட்களையும் சேர்த்து ரூ.417 கோடியே 18 லட்சத்துக்கு இந்த ஆண்டு மது விற்பனை ஆகி இருந்தது.

இந்த நிலையில் காணும் பொங்கல் தினமான நேற்று முன்தினம் சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டதால், காணும் பொங்கல் பண்டிகைகளை இழந்து காணப்பட்டது. இருந்தாலும், மது விற்பனையில் எந்த சுணக்கமும் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.171 கோடியே 87 லட்சத்துக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. மண்டல வாரியாக பார்க்கையில், சென்னை மண்டலத்தில் ரூ.38 கோடியே 14 லட்சத்துக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.36 கோடியே 12 லட்சத்துக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.32 கோடியே 85 லட்சத்துக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.34 கோடியே 59 லட்சத்துக்கும், கோவை மண்டலத்தில் ரூ.30 கோடியே 17 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் தான் அதிகளவில் மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளன.

கடந்த ஆண்டில் இதே காணும் பொங்கல் தினத்தன்று ரூ.174 கோடியே 89 லட்சத்துக்கு விற்பனை ஆகியிருந்தது. அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, ரூ.3 கோடியே 2 லட்சம் விற்பனை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News