செய்திகள்
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கியபோது எடுத்த படம்.

28 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.139¾ கோடி விவசாய கடன் தள்ளுபடி- அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

Published On 2021-01-15 11:07 GMT   |   Update On 2021-01-15 11:07 GMT
தர்மபுரி மாவட்டத்தில் 28 ஆயிரத்து 16 விவசாயிகளுக்கு ரூ.139¾ கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 260 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2.05 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விழாவில் கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க 2020-2021-ம் ஆண்டிற்கு இலக்கு ரூ.325 கோடி ஆகும். இதில் கடந்த டிசம்பர் மாதம் வரை 37 ஆயிரத்து 595 விவசாயிகளுக்கு ரூ.293.80 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தவணை தவறாது திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் 28 ஆயிரத்து 16 பயனாளிகளுக்கு 2016-ம்ஆண்டு நிலுவையில் இருந்த ரூ.139¾ கோடி விவசாய கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 1 லட்சத்து 49 ஆயிரத்து 789 நலவாரிய உறுப்பினர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு 27 இடங்களில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

முன்னதாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்ட பணியை பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் உதவி கலெக்டர் தணிகாசலம், தொழிலாளர் நல உதவி ஆணையர் இந்தியா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், அரசு வக்கீல் செந்தில், தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மதிவாணன், வீரமணி, சங்கர், ராஜா, செல்வக்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News