செய்திகள்
வேளாண் எந்திரங்களின் செயல்பாட்டை அமைச்சர் கே.பி.அன்பழகன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் நவீன வேளாண் எந்திரங்கள் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

Published On 2021-01-09 09:49 GMT   |   Update On 2021-01-09 09:49 GMT
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் நவீன வேளாண் எந்திரங்கள் வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை கோட்டத்தின் மூலமாக மேட்டு பகுதியில் மானாவாரியாக அதிகமாக பயிரிடப்பட்டுவரும் சோளம் அறுவடை செய்ய, டிராக்டருடன் முன்பக்கம் இயங்கும் சோளதட்டை அறுவடை செய்யும் எந்திரம் குறித்து விவசாயிகளுக்கான செயல் விளக்க முகாம் வகுரப்பம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தங்கினார். கலெக்டர் கார்த்திகா முன்னிலை வகித்தார்.

அப்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலம் தனிநபர், குழு மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட பலருக்கு வேளாண் எந்திரங்கள் மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் விவசாயக்கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில், பருவம் சார்ந்த பணிகளை விரைவாக செய்யவும், விளைபொருட்களை சரியான நேரத்தில் அறுவடை செய்யவும், இயற்கை பேரிடர் பாதிப்பு காலங்களில் அதிவிரைவாக வேளாண் சார்ந்த பணிகளை செய்திட பல்வேறு கருவிகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக சோள தட்டை அறுவடை செய்ய ஏக்கருக்கு கூலியாக ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை செலவாகும். இதே அளவு அறுவடையை அரசு டிராக்டர் மூலம் மணிக்கு ரூ.340 என்ற குறைந்த வாடகையில் செய்யும் போது ஏக்கருக்கு ரூ.1,500 வரையில் செலவு மீதியாவதுடன் குறைந்த நேரத்தில் பணியும் முடிக்கப்பட்டுவிடுகிறது. கூலியாட்கள் பற்றாக்குறை பிரச்சினையும் தீர்க்கப்படுகிறது.

தர்மபுரி கோட்டத்திற்கு, இந்த நிதியாண்டில் அரசு மூலம் 3 டிராக்டர்கள், 2 மண் அள்ளி சமன் செய்யும் எந்திரங்கள், ஒரு புதிய மண் தள்ளும் எந்திரம், 2 சோள தட்டை அறுவடை எந்திரம்- நாற்று நடவு எந்திரம், வேர் கடலை தோண்டி பறிக்கும் எந்திரம், தென்னை மட்டை துகளாக்கும் எந்திரம் ஆகியவற்றை குறைந்த வாடகையில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவற்றை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், உதவி கலெக்டர் தணிகாசலம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள் பத்மாவதி, சந்திரா, விக்னேஷ், தாசில்தார் கலைச்செல்வி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News