செய்திகள்
முட்டை

பறவை காய்ச்சல் எதிரொலி- முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் குறைந்தது

Published On 2021-01-07 08:49 GMT   |   Update On 2021-01-07 08:49 GMT
பறவை காய்ச்சல் பீதியால் முட்டை தேங்கும் அபாயம் உள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சேலம்:

கேரளா, ராஜஸ்தான், ஹரியானா உள்பட பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை பராமரிப்பு துறை, வனத்துறை மற்றும் பிற அரசு துறை அலுவலர்கள், கோழிப்பண்ணையாளர்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து கலெக்டர் மெகராஜ் பேசுகையில், கோழிப்பண்ணையாளர்கள் நுண்ணுயிரி பாதுகாப்பு முறைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும், அண்டை மாநிலங்களில் இருந்து கோழிப்பண்ணை சார்நத மூலப்பொருட்கள் கொள்முதலை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உரிய பாதுகாப்புடன் கொள்முதல் செய்யலாம்.

ஒரு மாதத்திற்குள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் அதனை அழித்து விடுவது நல்லது. மேலும் கோழிகள் இறப்பு குறித்து உடனுக்குடன் கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதனிடையே பறவைக்காய்ச்சல் தடுப்பு பணிக்காக கால்நடை துறை சார்பில் 45 அதி விரைவுக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு மருத்துவர், உதவியாளர் என 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அக்குழுவினர் தினசரி பண்ணைகளை கண்காணித்து கோழிகள் இறப்பு குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல் பகுதிகளில் இருந்து தினமும் 2 கோடி முட்டை கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. முட்டை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீண்டும் நாமக்கல் திரும்புகையில் அவற்றை கிருமி நாசினி கொண்டு முழுமையாக சுத்தப்படுத்த பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பண்ணைகளில் இறக்கும் கோழிகளின் உடற்கூறுகளை ஆய்வு செய்யவும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கால்நடைதுறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே முட்டை விலையை ஒரே நாளில் 25 காசுகள் குறைத்து பண்ணையாளர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் நேற்று ரூ.5.10-க்கு விற்கப்பட்ட முட்டை இன்று 4.85-க்கு விற்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் பறவை காய்ச்சல் பீதியால் முட்டை தேங்கும் அபாயம் உள்ளதால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News