செய்திகள்
பட்டா வழங்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம்.

அரசு காலனி வீட்டிற்கு பட்டா வழங்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

Published On 2021-01-05 12:37 GMT   |   Update On 2021-01-05 12:37 GMT
அரசு காலனி வீட்டிற்கு பட்டா வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகளும் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்கள் போடுவதற்காக தனிப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா அருணகிரிமங்கலம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் வந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஒரு மனுவை, கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர். அதில் 1983-ம் ஆண்டு அரசு எங்கள் தெருவில் உள்ள 43 குடும்பத்தினருக்கு காலனி வீடு வழங்கியது. ஆனால் அதற்கு இன்னும் பட்டா வழங்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் வீட்டிற்கு பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா புதுவேட்டக்குடி கிராம மக்கள் ரேஷன் கார்டுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் கிராமத்தில் ரேஷன் கார்டில் பி.எச்.எச். என்னும் முன்னுரிமை உள்ளவர்கள் பட்டியல் தவறுதலாக உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் ரேஷன் கார்டில் தவறுதலாக என்.பி.எச்.எச். என்று இடம் பெற்றுள்ளது. இதனை ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமையில் வந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம், நெல் ஆகிய பயிர்கள் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், நெல் ஆகிய பயிர்களுக்கு ஒரு எக்ேடருக்கு தலா ரூ.25 ஆயிரமும், பருத்திக்கு ஒரு எக்ேடருக்கு ரூ.20 ஆயிரமும், சின்னவெங்காயத்திற்கு ஒரு எக்ேடருக்கு ரூ.30 ஆயிரமும் நிவாரணமாக தமிழக அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 23 மனுக்களும், வேப்பந்தட்டை தாலுகாவில் 2 மனுக்களும், ஆலத்தூரில் 4 மனுக்களும், குன்னத்தில் 8 மனுக்களும், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் இருந்து 80 மனுக்களும் என மொத்தம் 117 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

Tags:    

Similar News