செய்திகள்
கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் குரூப்-1 தேர்வை எழுதியவர்களை காணலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு- கரூர் மாவட்டத்தில் 1,591 பேர் எழுதினர்

Published On 2021-01-04 09:56 GMT   |   Update On 2021-01-04 09:56 GMT
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை கரூர் மாவட்டத்தில் 1,591 பேர் எழுதினர்.
கரூர்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் குரூப்-1 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அதிக அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

கரூர் மாவட்டத்தில் 11 மையங்களில் 3 ஆயிரத்து 139 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நேற்று காலை 8 மணி முதல் தேர்வு மையத்துக்கு வர தொடங்கினர். அவர்கள் அனைவரும் தேர்வு மையத்துக்குள் நுழைவதற்கு முன்பு வரிசையாக நின்றனர்.

அவர்களின் உடல் வெப்பநிலை சரியான அளவில் இருக்கிறதா? முககவசம் அணிந்துள்ளார்களா?. செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் வைத்துள்ளார்களா? என தீவிரமாக கண்காணித்த பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பு தேர்வர்களின் கைகளில் கிருமிநாசினி திரவம் தெளிக்கப்பட்டது. சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 1 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு செய்தார். கரூர் மாவட்டத்தில் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 139 பேரில், 1,591 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,548 பேர் தேர்வு எழுத வரவில்லை. முன்னதாக தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதற்கு வசதியாக பஸ் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களின் முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News