செய்திகள்
ஜல்லிக்கட்டு

2020 ஆம் ஆண்டின் தமிழக நிகழ்வுகள்- தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய சம்பவங்கள்

Published On 2020-12-23 03:15 GMT   |   Update On 2020-12-23 03:15 GMT
2020ம் ஆண்டில், தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் பட்ட அவஸ்தைகள், பொருளாதார மந்தநிலை, இயற்கை சீற்றங்கள் என கடுமையான சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்ப்போம். 

ஜனவரி

ஜன.16: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேட்டில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி 16ம் தேதி நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கிய காட்சியை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் ஜனவரி 24ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.

பிப்ரவரி:

பிப்.14:தமிழக சட்டசபையில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பிப்.20: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பேருந்தில் பயணித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் நேபாள சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர்.

பிப்.22 திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

மார்ச்:

மார்ச் 20: சாத்தூர் சிப்பிப்பாறை ராஜேஸ்வரி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல்சிதறி பலியாகினர்.



மார்ச் 24: கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம், ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மார்ச் 25: கொரோனா வைரசுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்புடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மார்ச் 27: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவமனை செயல்பட தொடங்கியது.

மார்ச் 28: சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நோட்டீசை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். 

ஏப்ரல்:

ஏப். 3: தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள பகுதி என, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவித்தது.

ஏப். 8: தமிழகத்தில் 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை அரசு பிறப்பித்தது.

ஏப்.11:  புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. மாஹே பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர், கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

ஏப்.17: ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் 79 சதவீதம் அளவிற்கு குறைந்திருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

ஏப்.18: 100 நாள் வேலை உறுதி திட்ட தினக்கூலி 229ல் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது.

ஏப். 21: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் சைமனின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏப்.23: சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

ஏப். 24: பெண்களிடம்  முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் தொடா்பு ஏற்படுத்தி அவா்களிடம் நெருங்கி பழகி அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்த்து வந்த காசி கைது செய்யப்பட்டான்.

ஏப்.25: மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

ஏப்.27: மத்திய அரசு அறிவித்ததைப் பின்பற்றி தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு ஆண்டுக்கு நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

ஏப்.30: வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது. 

மே

மே 6: கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மருத்துவத் துறைக்கு சவால் விடுத்த சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.

மே 7: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 59-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. 

மே 8: கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 2,570 ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

மே 11: சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா தொற்றால் மூடப்பட்ட நிலையில், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் விற்பனை தொடங்கியது.



மே 22: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

மே 30: தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று சென்னை ஐகோர்ட் அறிவித்தது.

ஜூன்:

ஜூன் 9: தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

ஜூன் 10: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார். 

ஜூன் 12: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். 

ஜூன் 18: லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

ஜூன் 23: சாத்தான் குளம் காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஜூலை

ஜூலை 8: தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

ஜூலை 22: முதுபெரும் எழுத்தாளரான கோவை ஞானி உடல்நலக்குறைவால் காலமானார். 

ஜூலை 23: முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

ஜூலை 31: பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு  வெளியிடப்பட்டது. 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  

ஆகஸ்டு

ஆக. 14: அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

ஆக. 28: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி ஹெச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செப்டம்பர்

செப். 2: முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது. 

செப்.4: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அரசு அறிவித்தது. 

அக்டோபர்

அக். 6: கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிரபு கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அக்.9: தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

அக்.16: தமிழகம் முழுவதும் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது.

அக்.30: மருத்துவ படிப்பில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

அக்.31: தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

நவம்பர்

நவ. 6: பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தடையை மீறி திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்கினார்.



நவ. 25-26: வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக புதுவைக்கு வடக்கே மரக்காணம் அருகில் கரை கடந்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கடுமையான காற்றுடன் கனமழை பெய்தது. 3 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.

டிசம்பர்:

டிச.3: ஜனவரியில் அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாகவும், இதுதொடர்பாக டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

டிச. 5: புரெவி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பல லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. 

டிச. 5: சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள், உதவியாளர்கள் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

டிச. 8: தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத் திருத்தத்திற்கு, 8 மாதங்களுக்குப் பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

டிச. 7:  திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பற்றி தரக்குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து டிசம்பர் 7ல் திமுகவினர் விருதுநகரில் உருவபொம்மையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு எதிராக அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இதனால் விருதுநகரே போர்க்களமாக மாறியது.

டிச.14: தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

டிச. 16: திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிசம்பர் 19ம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

டிச.17: தமிழகம் முழுவதும் கடந்த 2½ மாதங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச வழக்கில் 33 அரசு அதிகாரிகளை கைது செய்துள்ளனர். 

டிச. 19: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

டிச.21: அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்தது.

டிச.21: வானில் அதிசய நிகழ்வாக, 800 ஆண்டுகளுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்து, ஒன்றாக காட்சியளித்தன. 
Tags:    

Similar News