செய்திகள்
நீடாமங்கலத்தில் நடந்த புதிய வாக்காளர் சேர்க்கை பணிகளை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் - அமைச்சர் காமராஜ்

Published On 2020-12-14 13:55 GMT   |   Update On 2020-12-14 13:55 GMT
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ராமவிலாஸ் தொடக்கப்பள்ளியில் புதிய வாக்காளர் சேர்க்கை பணி நடைபெற்றது. இந்த பணிகளை திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா வழியில் சாதாரண மக்களுக்கான திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி வருகிறார் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கஜாபுயல், கொரோனா தடுப்பு, நிவர்புயல், புரெவி புயல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கன மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றி கணக்கெடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது தான் காரணம். கால்வாய்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் சேர்கிறார்கள். அதற்கு காரணம் ஜெயலலிதா ஆட்சி இளைஞர்களை பாதுகாக்கிற ஆட்சியாக இருக்கிறது. பயிர் நிவாரணம் எவ்வளவு வழங்க வேண்டுமென்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளதாக கூறுகிறார்கள். எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஆலோசனைகளை சொல்லலாம். போகாத ஊருக்கு வழிகாட்டக்கூடாது. பயிருக்கு தி.மு.க. ஆட்சியில் அதிக நிவாரணம் கொடுத்தார்களா?.

தி.மு.க ஆட்சியில் கொடுத்த புயல், வெள்ள நிவாரணங்களை கணக்கு எடுத்து பார்ப்போமா?. வறட்சிக்கே நிவாரணம் கொடுத்த அரசு ஜெயலலிதா அரசு. மழையால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இ்வ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ராஜேந்திரன், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. துணைச்செயலாளர் ஆதிஜனகர், நகர செயலாளர் ஷாஜஹான், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், நகர எம்.ஜி.ஆர்.மன்றத்தலைவர் பெரியதம்பி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வீரையன் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வலங்கைமான் அருகே ஆதிச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடி முகாம்களில் பெயர் சேர்ப்பு, நீக்கம் குறித்த பணி நடைபெற்றது. முகாம்களில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய புதிய வாக்காளர்கள் வந்தனர். அப்போது போதுமான அளவு விண்ணப்பங்கள் இல்லை. இதனால் அவர்களுக்கு வ ாக்குச்சாடி அலுவலர்களால் வெற்று காகிதம் வழங்கப்பட்டது. அதில் புதிய வாக்காளர்கள் தங்களது விவரங்களை எழுதி அலுவலர்களிடம் வழங்கியதாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று வலங்கைமான் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாம்களை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் புதிய வாக்காளர்கள் போதிய விண்ணப்பம் இல்லாததால் வெற்று காகிதம் மூலம் விவரங்களை எழுதி கொடுத்ததாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் காமராஜ், புதிய வாக்காளர்களுக்கு விண்ணப்பம் வழங்குமாறு வலங்கைமான் தாசில்தார் பரஞ்சோதிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.

இதில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், நீடாமங்கலம் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தலைவர் இளவரசன், வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொரடாச்சேரி ஒன்றியத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தங்களை அ.தி.மு.க. வில் இணைத்து கொண்டனர். இதில் முன்னாள் நகராட்சி தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.டி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வருகிற தேர்தலில் அ.தி.மு.க. ெவற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் வருவார். தலைகீழாக நின்றாலும் அ.தி.மு.க.வை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது,

தலைகீழாக நிற்பது, சர்க்கஸ் செய்வது போன்றவை தி.மு.க.வின் வேலை. நேராக நின்று, நேர்மையாக நின்று, அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றார்.
Tags:    

Similar News