செய்திகள்
மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.

கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் செலுத்த வேண்டும் - கலெக்டர்

Published On 2020-12-12 14:19 GMT   |   Update On 2020-12-12 14:19 GMT
கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை கூறியுள்ளார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டு கரும்பு உற்பத்தி செய்து கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்திக்கான இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்குவது சம்பந்தமான மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கரும்பு உற்பத்தி செய்து வழங்கிய விவசாயிகளின் பட்டியலில் 250 மெட்ரிக் டன்னுக்கு கூடுதலாக கரும்பு வழங்கிய விவசாயிகள், ஒரே நாளில் 25 மெட்ரிக் டன்னுக்கு கூடுதலாக கரும்பு வழங்கிய விவசாயிகளின் பட்டியலை ஆய்வு செய்வதோடு 500 மெட்ரிக் டன்னுக்கு மேல் வழங்கிய விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் சமர்ப்பிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட சர்க்கரை ஆலைக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள கரும்பு வழங்கி உள்ளனரா? எனவும் வரையறுக்கப்படாத பகுதியில் இருந்து கரும்பு வழங்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யவும் தகுதியான விவசாயிகளின் பட்டியலை கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சர்க்கரை ஆலைப்பகுதி மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் ஒட்டப்பட வேண்டும்.

மேலும் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகளை நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் செலுத்த வேண்டும். இறுதியாக 2019-20-ம் ஆண்டு கரும்பு உற்பத்தி செய்து வழங்கிய விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிலுவை வைத்துள்ள முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை மற்றும் செம்மேடு ஆலை உடனடியாக விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்கவில்லையெனில் ஆலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பெரியசாமி, பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சரஸ்வதி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் லட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் ஹரிகரசுதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News