செய்திகள்
பணி இடைநீக்கம்

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் பணி இடைநீக்கம்

Published On 2020-12-12 10:26 GMT   |   Update On 2020-12-12 10:26 GMT
சேலத்தில் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்:

சேலம் அஸ்தம்பட்டி காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 47). இவர், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்திரை கட்டணம் பிரிவில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தார். சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த நிஷாந்த் என்பவரின் நிலத்திற்கு மதிப்பு குறைத்து காண்பிக்க துணை தாசில்தார் ஜீவானந்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கேட்டிருந்தார். அந்த லஞ்ச பணத்தை நேற்று முன்தினம் காலை சேலம் காந்தி ரோடு அருகே ஜீவானந்தம் வாங்கியபோது சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து ஜீவானந்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளை சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஜீவானந்தம் பணியாற்றி வந்த சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் முத்திரை கட்டண அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து துணை தாசில்தார் ஜீவானந்தம் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்று அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.


Tags:    

Similar News