செய்திகள்
தக்காளி

தலைவாசல் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை திடீர் உயர்வு

Published On 2020-12-06 09:05 GMT   |   Update On 2020-12-06 09:05 GMT
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்று திடீரென உயர்ந்தது.
தலைவாசல்:

தலைவாசலில் பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு, தலைவாசல், ஊனத்தூர், புத்தூர், வரகூர் சிறுவாச்சூர், காட்டுக்கோட்டை, சிவசங்கராபுரம், வடக்கு கல்வராயன் மலை, கருமந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டுக்கு மொத்த வியாபாரிகள் வரவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாக காய்கறி விலை வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் தக்காளி பழம் கிலோ ஒன்று ரூ.5 முதல் ரூ.7 வரை விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் மழையின் தாக்கம் சற்று குறைய தொடங்கி உள்ளதால், நேற்று தலைவாசல் காய்கறி மார்க்கெட்டுக்கு மொத்த வியாபாரிகள் மீண்டும் அதிகளவில் வரத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக நேற்று முன்தினத்தை விட நேற்று தக்காளி விலை இருமடங்காக திடீரென அதிகரித்து விற்பனை ஆனது. அதாவது தக்காளி ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை ஆனது.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, ‘தொடர் மழை எதிரொலியாக காய்கறி மகசூல் சற்று குறைந்துள்ள நிலையில், காய்கறிகளுக்கு கூடுதல் விலை கிடைத்தால் தான் விவசாயிகளுக்கு ஒரளவு லாபம் கிடைக்கும். குறிப்பாக தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனையானாலும் விவசாயிகளிடம் கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் நஷ்டமே ஏற்படுகிறது. கூடுதல் விலை கிடைத்தால் நன்றாக இருக்கும்‘ என்றார்கள்.
Tags:    

Similar News