செய்திகள்
எட்டயபுரம் ஆட்டுச்சந்தை

தொடர் மழையால் களை இழந்த எட்டயபுரம் ஆட்டுச்சந்தை

Published On 2020-12-06 08:43 GMT   |   Update On 2020-12-06 08:43 GMT
புரெவி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு நேற்று நூற்றுக்கணக்கான ஆடுகளே வந்தன. இதனால் சந்தை களை இழந்து காணப்பட்டது.
எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான மைதானத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நடைபெறும் ஆட்டுச்சந்தை பிரசித்தி பெற்றது.

அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரையிலும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் ரூ. 1 கோடி மதிப்பிலான பல ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனை செய்யப்படும்.

இதனால் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களது ஆடுகளை விற்பதற்காக லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் கொண்டு வருவார்கள்.

இதேபோன்று ஆடுகளை வாங்குவதற்காகவும் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் எட்டயபுரத்துக்கு வருவார்கள்.

மேலும் திருமண விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கும் அசைவ உணவு தயாரிப்பதற்காக எட்டயபுரத்தில் நடைபெறும் சந்தையில் வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.

இதனால் வெள்ளிக்கிழமை இரவில் இருந்தே எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வளாகம் களை கட்டிவிடும். எட்டயபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெரும்பாலான விவசாயிகள் ஆடுகளுடன் கால்நடையாகவே சந்தைக்கு வந்து தங்கி விடுவார்கள்.

இரவில் ஆட்டுச்சந்தை வளாகத்தில் தங்கி விட்டு, அதிகாலையிலேயே தங்களது ஆடுகளை விற்று பணமாக்கி மகிழ்ச்சியுடன் திரும்பி செல்வார்கள். இதன் மூலம் நகர பஞ்சாயத்துக்கும் கணிசமான வருவாய் கிடைத்து வந்தது.

வழக்கம் போல நேற்றும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை கூடியது. ஆனால் புரெவி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நேற்று நூற்றுக்கணக்கான ஆடுகளே வந்தன. இதனால் சந்தை களை இழந்து காணப்பட்டது.

இது குறித்து கமுதி, ராமநாதபுரத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறும்போது, பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை இங்கு வந்து விற்பனை செய்து விட்டு, இங்கிருந்து எங்களுக்கு தேவையான ஆட்டுக்குட்டிகளை வாங்கி செல்வோம்.

தற்போது பெய்து வரும் மழையினால் சந்தையின் பெரும்பாலான பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் உள்ளிருந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது.

வழக்கமாக ஆயிரக்கணக்கானவர்கள் வரும் சந்தையில் இன்று குறைந்த அளவிலானவர்களே வந்தனர்.

எனவே வாங்க ஆட்கள் இல்லாததாலும் மீண்டும் ஆடுகளை சொந்த ஊர் கொண்டு செல்லாமல் இருக்கவும் ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை ஆகும் ஆடுகளை ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனை செய்துவிட்டு செல்கிறோம்.

எனவே கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும் இந்த சந்தையில் அடிப்படை வசதிகளை செய்வதோடு, மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News