வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பயணிடம் திருடிய ஜேப்படி திருடனை அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடீரென பிளேடை வாயில் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
பிளேடை வாயில் போட்டு ஜேப்படி திருடன் தற்கொலை முயற்சி
பதிவு: டிசம்பர் 03, 2020 16:41
வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் கிறிஸ்து ராஜாவின் வாயில் இருந்த பிளேடை எடுத்த காட்சி.
வத்தலக்குண்டு :
மதுரையை சேர்ந்தவர் கிறிஸ்துராஜா (வயது 40). ஜேப்படி திருடன். நேற்று மதியம் இவர், வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏற முயன்ற ஒரு பயணியிடம் பிளேடை பயன்படுத்தி ஜேப்படி செய்ய முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து வத்தலக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது கிறிஸ்துராஜா, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்தனர். பின்னர் பிளேடை அவர் தனது வாய்க்குள் போட்டுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அவரை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வாய்க்குள் இருந்த பிளேடை வெளியே எடுத்தனர். அதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.