செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published On 2020-12-03 08:21 GMT   |   Update On 2020-12-03 08:21 GMT
சேலத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சேலம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாய் மாமனும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க. செயலாளரும் ராஜாவின் தந்தையுமான கருப்பணகவுண்டர் கடந்த 30-ந் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.

இதனால் அந்தியூர் செல்வதற்காக எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். தொடர்ந்து அங்கிருந்து காரில் அந்தியூருக்கு சென்ற அவர் உயிரிழந்த கருப்பண கவுண்டரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் கருப்பண கவுண்டரின் மகன் ராஜா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து சேலம் வந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.

இன்று காலை அஸ்தம்பட்டியில் உள்ள சுற்றுலா ஆய்வு மாளிகையில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது தேர்தல் வெற்றிக்கு இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

இன்று மாலை ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் கொடுமுடி, கரூர் வழியாக மதுரைக்கு செல்கிறார்.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுலகத்தில் நாளை (4-ந் தேதி)காலை நடைபெறும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒருங்கிணைந்த குடிநீர் வினியோக திட்டம் மற்றும் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.

அங்கிருந்து காலை 11 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். மாலை 6.30 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி அவர் செல்லும் வழியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Tags:    

Similar News