செய்திகள்
மதுரை ஐகோர்ட்

எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணுக்கு இருசக்கர வாகனம் - மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்

Published On 2020-12-01 02:04 GMT   |   Update On 2020-12-01 02:04 GMT
எச்.ஐ.வி.பாதித்த சாத்தூர் பெண்ணுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை:

மதுரையை சேர்ந்த அப்பாஸ்மந்திரி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. தொற்றுடன் ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் தானமாக பெற்ற ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது தான், இதற்கு காரணம். பெரும்பாலான ரத்த மையங்களில் பணியாளர்கள் கிடையாது. எனவே பாதுகாப்பான முறையில் ரத்தம் பெற உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 450 சதுர அடிக்கு குறையாமல் 2 படுக்கை அறைகளை கொண்ட சுற்றுச்சுவருடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி இழப்பீடு மற்றும் வீடு கட்டித்தரப்பட்டுவிட்டதாக ஏற்கனவே கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவருக்கு இருசக்கர வாகனம் அளிக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டதாக அரசு வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு ஆயுள் காப்பீடு பெற்றுத்தருவது குறித்து தகவல் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர். இதேபோல கோர்ட்டில் பணியாற்றும் பெண் வக்கீல்களுக்கு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்றும் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News