செய்திகள்
திருப்பூர் பூ மார்க்கெட்டில் கனகாம்பர பூ விற்பனை நடந்த போது எடுத்த படம்.

திருப்பூர் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ விலை ‘கிடு கிடு’ உயர்வு

Published On 2020-11-30 14:51 GMT   |   Update On 2020-11-30 14:51 GMT
திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ விலை கிடு கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூரில் பல்லடம் ரோட்டில் உள்ள காட்டன் மார்க்கெட்டில் பலர் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை செய்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மொத்த, சில்லரை வியாபாரிகள் என பல தரப்பினரும் இங்கு வந்து பூக்களை விற்பனை செய்கிறார்கள். பொதுமக்கள், வியாபாரிகள் பலரும் வந்து பூக்களை வாங்கி செல்கிறார்கள்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே மல்லிகை பூவின் விலை உயர்வை சந்தித்து வந்தது. ஆனால் நேற்று கனகாம்பரம் பூவின் விலை கிடு கிடுவென உயர்ந்து காணப்பட்டது. மற்ற பூக்களை விட இதன் விலையே அதிகமாக இருந்தது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

மல்லிகை பூவின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்தது. இந்த நிலையில் முகூர்த்த தினங்கள் காரணமாக கனகாம்பரம் பூவின் தேவை அதிகமாக இருந்தது. இருப்பினும் இதன் வரத்து குறைவாகவே இருந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து குறைவாகவே கனகாம்பரம் பூ வந்தது.

இதன் காரணமாக விலை கிடு கிடுவென உயர்ந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட, கனகாம்பரம் பூ நேற்று ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. வருகிற நாட்களில் விலை குறையும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News