செய்திகள்
ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்- தமிழக அரசிதழில் வெளியீடு

Published On 2020-11-24 01:21 GMT   |   Update On 2020-11-24 01:21 GMT
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தற்போது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பணம் வைத்து ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள், இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தன. ஆனால் அதில் பங்கேற்கும் சிலர் பணத்தை இழந்து, வேதனையில் தற்கொலை செய்யும் நிலையும் அதிகரித்து வந்தது.

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை எதிர்த்து குரல் கொடுத்தன.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், மத்திய, மாநில அரசுகளிடம் ஐகோர்ட்டு சில கேள்விகளை எழுப்பி இருந்தது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் விரைவில் தடை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அவசர சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபை கூடாத நிலையில் கவர்னரால் இந்த அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த அவசர சட்டத்தின்படி தமிழ்நாடு விளையாட்டுகள் சட்டம்- 1930, சென்னை நகர போலீஸ் சட்டம்-1888, தமிழ்நாடு மாவட்ட போலீஸ் சட்டம்-1859 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் போலீஸ் சட்டங்கள் (திருத்தம்) அவசர சட்டம் என்று அழைக்கப்படும் இந்த அவசர சட்டம் 21-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த அவசர சட்டத்தின்படி, ஏற்கனவே இருக்கும் சட்டப்பிரிவில் ‘எலக்ட்ரானிக் ரெகார்டு’, கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், இணையதளம் மற்றும் அவற்றின் தொடர்புடைய எந்தவொரு சாதனம் ஆகியவையும் இணைக்கப்படுகின்றன.

இந்த அவசர சட்டத்தின்படி, ஒரு நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்துடன் விளையாட்டு ரீதியான தொடர்பு வைத்துக்கொள்பவரும் குற்றச்சாட்டுக்கு ஆளாவர்.

கம்ப்யூட்டர் சாதனம் மூலம் தடை செய்யப்பட்டுள்ள விளையாட்டை நடத்தும்பட்சத்தில், அந்த நபருக்கோ, கம்பெனியின் உயர் அதிகாரிக்கோ ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

அதுபோல அதற்கான அரங்கம் வைத்திருக்கும் பட்சத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News