செய்திகள்
நேற்று தியேட்டருக்கு படம் பார்க்க வந்த இளைஞர் கூட்டத்தை காணலாம்.

தீபாவளி தினத்தன்று சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரம்பின

Published On 2020-11-16 02:30 GMT   |   Update On 2020-11-16 02:30 GMT
தீபாவளி தினத்தன்று திருச்சி சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரம்பின.
திருச்சி:

கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 -ந் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் இயங்க தொடங்கின. 10-ந் தேதி திருச்சியில் ஒரு சில தியேட்டர்களை தவிர பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன.

எம்.ஜி.ஆர். நடித்த பழைய படங்கள் திரையிடப்பட்டு இருந்தன. மறுநாள் அனைத்து தியேட்டர்களும் திறக்கப்பட்டு இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வரவில்லை. இதனால் திறந்து வைக்கப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களும் காற்று வாங்கின. அரசு உத்தரவின்படி 50 சதவீத இருக்கைகள் கூட நிரம்பவில்லை.

இந்நிலையில் தீபாவளி தினத்தன்று திருச்சியில் பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரம்பின. ஒரு சில தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஆனால் அரசு விதிமுறைப்படி 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் நிரப்பக் கூடாது என்பதால் ஆர்வமிகுதியால் வந்த ரசிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் நடிகர் சந்தானம் நடித்து வெளியான பிஸ்கோத்து மற்றும் இரண்டாம் குத்து 2, தட்றோம் தூக்குறோம் உள்ளிட்ட சில சிறிய அளவிலான பட்ஜெட் படங்கள் மட்டுமே வந்தன.

அதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வம் காட்டியது வியப்பாக இருந்தது. இதுபற்றி திரையரங்க உரிமையாளர்கள் கூறுகையில் தியேட்டரில் படம் பார்த்தால் தான் திருப்தி என கருதும் ரசிகர்கள் மட்டுமே படம் பார்க்க வந்தனர் என்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான சினிமா தியேட்டர்கள் பரபரப்புடன் காணப்பட்டன.

படம் பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிகளவில் வந்தனர்.அவர்கள் கை கழுவுவதற்கு சானிடைசர் வழங்கப்பட்டது. முக கவசம் அணிந்த ரசிகர்களை மட்டுமே தியேட்டருக்குள் செல்ல ஊழியர்கள் அனுமதித்தனர்.
Tags:    

Similar News