செய்திகள்
வாழைத்தார்

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

Published On 2020-11-09 05:37 GMT   |   Update On 2020-11-09 05:37 GMT
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று வாழைத்தார் வரத்து அதிகரித்தது. சுமார் 12 ஆயிரம் வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர், கணுவக்கரை, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், செல்லப்பம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் பாதியில் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று வாழைத்தார் வரத்து அதிகரித்தது. சுமார் 12 ஆயிரம் வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன.

இதைத்தொடர்ந்து நடந்த ஏலத்தில் கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு வாழைத்தார்களை வாங்கினர். கதளி கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.41 வரை, நேந்திரன் கிலோவுக்கு ரூ.9 முதல் ரூ.13 வரை, பூவன் தார் ரூ.250 முதல் ரூ.325 வரை, ரஸ்தாளி தார் ரூ.250 முதல் ரூ.450 வரை, தேன் வாழை தார் ரூ.250 முதல் ரூ.500 வரை, செவ்வாழை தார் ரூ.150 முதல் ரூ.750 வரை, நாடன் தார் ரூ.150 முதல் ரூ.300 வரை, ரோபஸ்டா தார் ரூ.100 முதல் ரூ.275 வரை ஏலம் போனது. கடந்த ஏலத்தில் நேந்திரன் கிலோவுக்கு ரூ.18 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஏலத்தில் விலை குறைந்து உள்ளது. இதற்கு கேரளாவில் சிப்ஸ் தயாரிப்பு குறைந்து உள்ளதே காரணம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News