செய்திகள்
தற்கொலை

துறையூர் அருகே உதவி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-05 08:00 GMT   |   Update On 2020-11-05 08:00 GMT
துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் உதவி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தா.பேட்டை:

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகா தெற்கு தில்லைநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகள் சவுமியா (வயது 29). இவர் திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி, கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் இவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். ஆனால் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை. இதனால் கடந்த 2-ந்தேதி சவுமியா மீண்டும் அதே கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிக்கு சேர்ந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கியிருந்த சவுமியா நேற்று முன்தினம் இரவு தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சகஜமாக பேசிவிட்டு தூங்க சென்றார். இந்த நிலையில் நேற்று காலை தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் பணிபுரிந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், கல்லூரி நிர்வாகத்துக்கும், ஜெம்புநாதபுரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று காரணம் தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கண்ணனூர் வடக்குவெளி கிராம நிர்வாக அதிகாரி சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி பேராசிரியை சவுமியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News