செய்திகள்
தீயணைப்பு துறையினர் குட்டையில் இறங்கி மாணவனை தேடிய காட்சி. (உள்படம்: ராஜா)

தஞ்சை அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

Published On 2020-11-02 10:08 GMT   |   Update On 2020-11-02 10:08 GMT
தஞ்சை அருகே ஆட்டை காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கள்ளப்பெரம்பூர்

தஞ்சையை அடுத்த வல்லம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல் மகன் ராஜா (வயது15). வடிவேல் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். ராஜா வல்லம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் ராஜா பெற்றோருக்கு உதவியாக ஆடு மேய்த்து வந்தார்.

வல்லம் அய்யனார் கோவில் சுடுகாடு அருகே பழைய மண் குவாரி பகுதியில் அவர் நேற்று மதியம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள குட்டையில் அவர் மேய்ப்பதற்காக ஓட்டி வந்த ஆடு ஒன்று தவறுதலாக விழுந்துவிட்டது. அதை காப்பாற்றுவதற்காக ராஜா குட்டையில் இறங்கினார்.

இதில் எதிர்பாராதவிதமாக அவர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் குட்டையில் மூழ்கி தத்தளித்த அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். இதுகுறித்து வல்லம் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீசாரும், தஞ்சையில் இருந்து வந்த தீயணைப்புப்படை வீரர்களும் குட்டையில் இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடிவேலு வல்லம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆட்டை காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவர் குட்டையில் மூழ்கி இறந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News