செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

பெரம்பலூரில் கல்லறை தோட்ட பாதையை மீட்க கோரி சிலுவை ஏந்தி ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-30 10:32 GMT   |   Update On 2020-10-30 10:32 GMT
கல்லறைத் தோட்ட பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து பாதையை மீட்டு மீண்டும் பாதை அமைத்து தரக்கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஊராட்சியில் ஆண்டுதோறும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 2-ந் தேதி கல்லறை திருநாள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தலித் கிறிஸ்தவர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த கல்லறை தோட்டத்திற்கான பாதையை, சிலர் தங்களுக்கு பட்டா இருப்பதாக கூறி, கம்பி வேலி போட்டு பாதையை அடைத்து விட்டனர். இது தொடர்பாக பலமுறை போராட்டம் செய்து, கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்து 6 மாதத்திற்கு மேலாகியும் பாதை அமைத்து தரவில்லை என்று தெரிகிறது.

இதனை கண்டித்தும், கல்லறைத் தோட்ட பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து பாதையை மீட்டு மீண்டும் பாதை அமைத்து தரக்கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செட்டிகுளம் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் செல்லதுரை, வழக்கறிஞர் காமராசு, திராவிடர் கழகப் பொறுப்பாளர் தங்கராசு மற்றும் திரளான தலித் கிறிஸ்தவர்கள் சிலுவை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News