செய்திகள்
மழை

சென்னையில் கனமழைக்கு காரணம் என்ன?- வானிலை மையம் விளக்கம்

Published On 2020-10-29 06:21 GMT   |   Update On 2020-10-29 06:21 GMT
சென்னையில் கனமழைக்கு காரணம் என்ன என்பது பற்றி வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை:

சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தென் மாவட்டங்களில்தான் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தது.

நெல்லை, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது.

இதற்கான காரணம் என்ன என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையுடன் மேலடுக்கு சுழற்சியும் சேர்ந்ததாலேயே சென்னையில் கனமழை பெய்துள்ளது. கடல் பரப்பில் தொலைவில் இருந்த மேலடுக்கு சுழற்சி நேற்றிரவு திடீரென சென்னைக்கு அருகில் வந்துள்ளது.

சென்னையில் 7 செ.மீ. அளவுக்கே மழை பெய்யும் என்று கணித்திருந்தோம். மேலடுக்கு சுழற்சியின் திடீர் மாற்றம் காரணமாக இரு மடங்கு அளவுக்கு கூடுதலாக மழை பெய்துள்ளது.

இன்றும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். அப்போது 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று மதியம் வரையில் பலத்த மழை பெய்யும். அதன் பிறகு மாலையிலும் மழை நீடிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News