செய்திகள்
நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 3 மாதம் அவகாசம்

Published On 2020-10-24 23:07 GMT   |   Update On 2020-10-25 01:28 GMT
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அவகாசம் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு 9-வது முறையாக தமிழக அரசு மேலும் 3 மாத காலம் நீட்டித்துள்ளது.
சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள் சிகிச்சைக்கு பிறகு 2016, டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் கிளம்பியதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை, தமிழக அரசு கடந்த 2017, செப்டம்பரில் அறிவித்தது. 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் உரிய காலத்தில் விசாரணை முடியாத காரணத்தால் தமிழக அரசு அவ்வப்போது விசாரணைக்கு கால அவகாசம் வழங்கியது. கடந்த ஆண்டு ஏப்ரல் வரையிலான காலத்தில் 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டு சென்றது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2019) ஏப்ரலில் ஆறுமுகசாமி கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 20 மாதங்களாக தடை நீடிக்கும் நிலையில், ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை காலம் கடந்த ஜூன் 24-ந்தேதி நிறைவடைந்தது. இதையடுத்து விசாரணை காலத்தை நீட்டித்து தர வேண்டும் என்று ஆறுமுகசாமி தமிழக அரசு கடிதம் எழுதினார். அதன்பேரில் 4 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் 9-வது முறையாக தமிழக அரசு மேலும் 3 மாத காலம் நீட்டித்துள்ளது.
Tags:    

Similar News