செய்திகள்
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடகை கார் டிரைவர்கள்-உரிமையாளர்களை படத்தில் காணலாம்.

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வாடகை கார் டிரைவர்கள்-உரிமையாளர்கள் முற்றுகை

Published On 2020-10-22 07:15 GMT   |   Update On 2020-10-22 07:15 GMT
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வாடகை கார் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்துடன் இணைந்த பாடாலூர் வாடகை கார் டிரைவர்கள்- உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மகாமுனி தலைமையில் செயலாளர் சுரேஷ், பொருளாளர் முத்துசாமி, குமரவேல் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் கார்களுடன் நேற்று மதியம் வந்து, திடீரென்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாக வாடகை கார்கள் வைத்து இயக்கி வருகிறோம். தற்போது சிலர் தங்களது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார்கள். இதனால் எங்களுக்கு சவாரி கிடைப்பதில்லை. மேலும் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. சொந்த கார்களை வாடகைக்கு இயக்குபவர்கள் மீதும், அந்த கார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தான் நாங்கள் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட நேரிட்டது. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் சொந்த கார்களை வைத்து வாடகைக்கு இயக்குபவர்கள் மீதும், அந்த கார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதையடுத்து அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோரிடம் புகார் மனுவினை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News