செய்திகள்
பணம் திருட்டு

ஆரல்வாய்மொழியில் மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் கொள்ளை

Published On 2020-10-19 06:19 GMT   |   Update On 2020-10-19 06:19 GMT
ஆரல்வாய்மொழியில் மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38), மாற்றுத்திறனாளி. ஆரல்வாய்மொழியில் வடக்கூர் செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் மேஜையின் மேல் இருந்த பொருள்களும் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அய்யப்பன் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மளிகைக் கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருடனை கண்டுபிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் போலீசார் முற்பட்டனர். அப்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் கருவியும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

சமீபகாலமாக ஆரல்வாய்மொழி பகுதியில் இரவு மட்டுமல்ல பகலிலும் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. ஆனால் குற்றவாளிகளை இதுவரைகண்டுபிடிக்கவில்லை. இதனால் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News