செய்திகள்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published On 2020-10-18 23:28 GMT   |   Update On 2020-10-18 23:28 GMT
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. அதனால் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சொந்த மற்றும் வாடகை வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் தற்போது அரசு சார்பில் பஸ் போக்குவரத்து 70 சதவீதம் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக காலை, மாலை வேளைகளில் அதிக அளவில் பஸ்கள் இயக் கப்படுகின்றன. மதிய வேளைகளில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருப்பதால் பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களில் மக்கள் நலன் கருதி கூடுதலாக பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நீண்ட தூர பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பஸ் வசதி செய்து தரப்படும். கொரோனா தொற்று குறைந்தவுடன் பழையபடி இயல்பு வாழ்க்கை திரும்பி விடும். அப்போது முழுமையாக பஸ் போக்குவரத்து இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., கூட்டுறவு வங்கி தலைவர் சித்துராஜ், நகர அ.தி.மு.க. துணை செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.
Tags:    

Similar News