செய்திகள்
கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 7 பேர் கைது

Published On 2020-09-18 17:31 GMT   |   Update On 2020-09-18 17:31 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:

பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாயாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த பணம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களில் ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரியவந்தது.

இந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள். முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது. வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, விவசாயிகள் அல்லாதவர்கள் 2 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் உதவி இயக்குனர்கள் 2 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 18 பேர் என மொத்தம் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் போலி விவசாயிகள் 50 ஆயிரம் பேரிடம் இருந்து வங்கிகள் மூலம் ரூ.15 கோடி வரை திரும்ப பெறப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 9 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News