செய்திகள்
என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர்

ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் வழக்கில் புழல் சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Published On 2020-09-16 03:36 GMT   |   Update On 2020-09-16 03:36 GMT
ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் வழக்கில் புழல் சிறையில் சுமார் 2 மணிநேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
திரு.வி.க.நகர்:

சென்னை அயனாவரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சங்கர் கடந்த மாதம் 21-ந்தேதி அயனாவரம் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் அயனாவரம் சென்று இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

அதில், போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டரின் டிரைவர் மற்றும் சில சாட்சிகள் என 13 பேருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தி வீடியோ பதிவு செய்தனர்.

தொடர்ந்து அயனாவரம் பகுதியில் உள்ள சங்கரின் தாய் மற்றும் உறவினர்கள் இடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், புழல் சிறையில் உள்ள ரவுடி சங்கரின் கூட்டாளிகளான ராணி மற்றும் தினகரன் ஆகியோரிடம், நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள திலீப் என்பவரிடம் நேற்று சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக நாளை கேளம்பாக்கத்தில் உள்ள சங்கரின் வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News