செய்திகள்
கோப்புபடம்

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம்

Published On 2020-09-15 12:01 GMT   |   Update On 2020-09-15 12:01 GMT
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கலெக்டர் ஷில்பா காணொலிகாட்சி மூலம் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி வருகிறார். வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மனு கொடுப்பதற்கு வசதியாக, கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு செல்கிறார்கள்.

இதேபோன்று நேற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள், நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர். மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வக்கீல் சுடலையாண்டி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மானூர் தாலுகா உக்கிரன்கோட்டை அருகே உள்ள மறக்குடியில் இருந்து செல்லும் வழியில் 17 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கிறார்கள். அந்த இடத்தைச் சுற்றி வேலி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தோம். அவர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அங்கு தடுப்புவேலி அமைத்தால், அந்த பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதை தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இளைஞர் அணி செயலாளர் காஜா இஸ்மாயில் தலைமையில், மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், நிர்வாகிகள் ஜமால், செய்யது, காசிராஜன், நயினார் உள்ளிட்ட நிர்வாகிகள், காய்கறி மாலை அணிந்து வந்து, கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், மேலப்பாளையத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் உழவர் சந்தை மட்டும் திறக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சங்கர் நகர் ஊர் பொதுமக்கள் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், சங்கர் நகர் சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலராக ராஜேசுவரன் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றியபோது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டது. தற்போது அவரை பணியிட மாற்றம் செய்து விட்டனர். இதனால் மக்கள் நலப்பணிகள் சரியாக நடக்கவில்லை. எனவே ராஜேசுவரனை மீண்டும் சங்கர்நகர் பேரூராட்சி செயல் அலுவலராக நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது

அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த கணேசன் தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு தட்டு ஏந்தி, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா 3 மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் நில அளவர் வந்து, நிலத்தை அளந்து தராமல் தாமதப்படுத்தி வருகிறார். இதனால் நாங்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா நிலத்தை விரைவில் அளந்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

பேட்டை மாநகர வியாபாரிகள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், நெல்லை டவுனில் இருந்து பேட்டை வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் பேட்டையில் இருந்து நெல்லை செல்லும் சாலை மற்றும் டவுன் தொண்டர் சன்னதி வரையிலும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. அந்த வேலையை துரிதப்படுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். ஆங்காங்கே குண்டும் குழியும் இருப்பதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News