செய்திகள்
மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க கோரி மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்

மகளிர் போலீஸ் நிலையம் திறக்க கோரிக்கை

Published On 2020-09-01 12:38 GMT   |   Update On 2020-09-01 12:38 GMT
அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் நிலையம் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கரூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்கும் விவசாயிகள் சார்பில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்ட சுற்று வட்டார பகுதியில் நாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை கரூர் உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறோம். கொரோனா நோயை கட்டுப்படுத்தும் விதமாக உழவர் சந்தை மூடப்பட்டது. விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை விவசாயிகளே விற்று பயனடையும் வகையில் உழவர் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். 5-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில், கடந்த ஜனவரி மாதத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து அதற்கு விண்ணப்பித்தோம். ஆனால் எழுத்து தேர்வுக்கு இது வரை எந்த அழைப்பும் வராததால் சம்பந்தப்பட்டவர்கள் சார்பில் எந்த வித விளக்கமும் இல்லாமல் உள்ளது. எனவே எழுத்து தேர்வு தற்போது சாத்தியம் இல்லாத சூழ்நிலை உள்ளதால் நேர்முக தேர்வு மூலம் அந்த காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூறியுள்ளனர்.

தமிழந்நாடு இளைஞர் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் வந்தவர்கள் போட்ட மனுவில், அரவக்குறிச்சி தொகுதியில் வசிக்கும் பெண்கள் ஏதேனும் பிரச்சினை என்றால் அவர்கள் புகார் அளிக்க கரூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சுமார் 30 கிலோ மீட்டர் பயணம் செய்து வர வேண்டி உள்ளது. எனவே அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம் அருகில் உள்ள பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகம் போதிய பராமரிப்பு இன்றியும், சரியான முறையில் செயல்படாத நிலையில் உள்ளது. எனவே சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

சாமானிய மக்கள் நல கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், அமராவதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம், மக்கள் பாதை ஆகிய அமைப்புகள் சார்பில் போட்ட மனுவில், ஆற்று மணலையும் ஆற்றுத்தண்ணீரையும் திருடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக தனியார்களின் லாபத்திற்காக அமைக்கப்பட்டு வரும் வட்ட கிணற்றை இடித்து அகற்றி ஆற்றின் நீராதார வளங்களை பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
Tags:    

Similar News