செய்திகள்
ஆன்லைன் விண்ணப்ப பதிவு

என்ஜினீயரிங் படிப்பில் சேர 1.60 லட்சம் பேர் விண்ணப்பம்- கடந்த ஆண்டை விட அதிகம்

Published On 2020-08-17 01:32 GMT   |   Update On 2020-08-17 01:32 GMT
என்ஜினீயரிங் படிப்பில் சேர 1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பப்பதிவு அதிகரித்துள்ளது.
சென்னை:

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் வாரத்திலேயே ஏராளமான மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர். அதன் பின்னர், சீரான இடைவெளியில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த 11-ந் தேதி நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு 1½ லட்சத்தை தொட்டது.

நேற்று முன்தினம் நிலவரப்படி, 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்து இருந்ததாகவும், அதில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 118 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளான நேற்று சுமார் 2 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்ததாக கூறப்பட்டது.

அந்தவகையில் நேற்று மாலை நேர நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேர 1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பப்பதிவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் பதிவு செய்த மாணவ-மாணவிகளில் இதுவரை 90 ஆயிரத்து 272 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருக்கின்றனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) கடைசிநாள் ஆகும். 
Tags:    

Similar News