செய்திகள்
தாக்கப்பட்ட வன ஊழியர்களை படத்தில் காணலாம்

மரக்கடத்தலை தடுத்த வன ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல் - 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2020-08-08 09:36 GMT   |   Update On 2020-08-08 09:36 GMT
அஞ்செட்டி அருகே மரக்கடத்தலை தடுத்த வன ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டப்பள்ளம் வனப்பகுதியில், மர்ம கும்பல் மரங்களை வெட்டி கடத்துவதாக வந்த தகவலின் பேரில், வன ஊழியர்கள் சுப்பிரமணியன் (வயது 45), புஷ்பா, (25), சக்திவேல் (28), மாதையன் (56), கனிமொழி (27) ஆகிய 5 பேரும் அட்டப்பள்ளம் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல், வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். 

இதை பார்த்த வன ஊழியர்கள், மரங்கள் வெட்டுவதை தடுத்து அவர்களை கைது செய்ய முயன்றனர். மூன்று பேர் தப்பியோடினார்கள். மற்ற மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து பெண் ஊழியர்கள் புஷ்பா, கனிமொழி ஆகியோரை தாக்கினார்கள். அவர்களிடம் இருந்து பெண் ஊழியர்களை காப்பாற்றிய ஆண் வன ஊழியர்கள் விடுதிக்கு அழைத்து சென்ற போது பின்தொடர்ந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் வன ஊழியர்களை தாக்கியது. 

இதில் புஷ்பா, கனிமொழி, சக்திவேல், சுப்பிரமணியன், மாதையன் ஆகிய ஐந்து பேரும் காயமடைந்தனர். அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஊழியர்களும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சக்திவேல் உட்பட மூன்று பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சக்திவேலுக்கு இடது கையில் வெட்டு விழுந்துள்ளது. இது குறித்து அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் தேவராஜ் மருத்துவமனைக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் அஞ்செட்டி போலீசில் வனத்துறை சார்பில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கேரட்டி பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News