செய்திகள்
சக்திவேல்

சிவில் சர்வீசஸ் தேர்வில் தையல் தொழிலாளியின் மகன் வெற்றி

Published On 2020-08-07 14:14 GMT   |   Update On 2020-08-07 14:14 GMT
சிவில் சர்வீசஸ் தேர்வில் தையல் தொழிலாளியின் மகன் வெற்றி பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ்.ஆக வேண்டும் என்பதுதான் ஆசை என அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:

மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டு தோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடந்தது. அதை தொடர்ந்து இறுதி முடிவு வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மண்ணரையை சேர்ந்த சக்திவேல் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து சக்திவேல் கூறியதாவது:-

எனது தந்தை தங்கவேல். தாய் லாவண்யா. இருவரும் தையல் தொழிலாளிகள். நான் எனது சொந்த ஊரில் தொடக்க கல்வியை முடித்து விட்டு, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 முடித்தேன். பின்னர் 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்தேன். எனது ஆசை ஐ.ஏ.எஸ்.ஆக வேண்டும் என்பதுதான்.

பட்டப்படிப்பு முடித்ததும் சென்னை சென்று 2018-19 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதை தொடர்ந்து 2019-20-ம் ஆண்டும் தேர்வு எழுதினேன். இந்திய அளவில் 471-வது இடம் கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்கு எனது தாய்-தந்தை, தங்கை ஆகியோர்தான் காரணம். எனக்குஎந்த பணி கிடைத்தாலும் செய்வேன். மீண்டும் தேர்வை எழுதி ஐ.ஏ.எஸ்.பணி வாங்கி விடுவேன். நான் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக கல்வித்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News