செய்திகள்
விவசாயி அணைக்கரை முத்து உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி

கடையம் விவசாயி உடல் மறுபிரேத பரிசோதனை நடந்தது- உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published On 2020-08-01 10:08 GMT   |   Update On 2020-08-01 10:08 GMT
ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடையம் விவசாயி உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை அடுத்த வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயியான இவர், கடையம் மந்தியூர் பகுதியில் தோட்டம் வைத்து பயிர் செய்து வந்தார். அந்த தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக கடையம் வனத்துறையினர் அணைக்கரை முத்துவை கடந்த 22-ந்தேதி விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதையடுத்து அணைக்கரை முத்து உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அன்று இரவு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, வனத்துறையினர் தாக்கியதால் தான் அணைக்கரை முத்து இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இந்த வழக்கு விசாரணையைசி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அணைக்கரை முத்து குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அணைக்கரை முத்து மனைவி பாலம்மாள், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “எனது கணவர் வனத்துறையினர் தாக்கியதால் இறந்தார். அவரது உடலை அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை செய்துள்ளனர். எனவே உடலை மறுபரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், அணைக்கரை முத்து உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும். அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அணைக்கரை முத்து உடல் மறுபிரேத பரிசோதனை நடந்தது. தடயவியல் டாக்டர் குழுவினர் காலை 11.30 மணிக்கு வந்தனர். அம்பை மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயனும் வந்தார். ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு அணைக்கரை முத்து மனைவி பாலம்மாள், மகன்கள் நடராஜன், வள்ளிநாயகம், மகள்கள் வசந்தி, மாரியம்மாள் உள்பட பலர் வந்து இருந்தனர். பகல் 12 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கி, 1.45 மணிக்கு முடிந்தது. பரிசோதனை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பகல் 2.15 மணி அளவில் உடல் சொந்த ஊரான வாகைக்குளம் கொண்டு செல்லப்பட்டது.

மாலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News