செய்திகள்
தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்

தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரால் பரபரப்பு

Published On 2020-07-25 12:40 GMT   |   Update On 2020-07-25 12:40 GMT
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கூட்டம் நிறைவுபெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவித்தார். அப்போது தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் கருத்தை கேட்டு பின்னர் கூட்டத்தை முடியுங்கள் என்றார். பின்னர் கூட்டம் முடிந்து விட்டது என ஆணையாளர் விஜயகுமார் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது கவுன்சிலர் சுரேஷ் கூறியதாவது:- ஊராட்சி ஒன்றிய கூட்டப்பொருளில் இடம்பெற்றுள்ள ஒப்பந்ததாரர்கள் மொத்தம் 11 நபர்கள் உள்ளனர். இதில் கடந்த 20 வருடமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே உள்ளவரை மீண்டும் ஒப்பந்ததாரராக எந்த அடிப்படையில் புதுப்பிக்க முடியும். இதனை ரத்து செய்யவேண்டும். ஒன்றிய வார்டுக்கு உட்பட்ட கவுன்சிலர்களுக்கு தெரியாமல் திட்டப்பணிகளை நேரடியாக ஒன்றிய பெருந்தலைவர் தலையிட்டு செய்யக்கூடாது. உரிய வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்து செய்யவேண்டும். வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் கட்டிட திறப்பு விழாக்களில் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் பெயர் அவசியம் பெயர் பலகையில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 13 வார்டு கவுன்சிலர்கள் பெயர்கள் அனைத்தும் வார்டு வாரியாக வரிசை அடிப்படையில் இடம்பெற வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்கள் திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்துள்ளபடி உள்ள பணிகள் குறித்து தேர்வு செய்து வழங்கினால் அதனை ஒன்றிய பெருந்தலைவர் மாற்றம் செய்யாமல் அமலாக்க வேண்டும். ஆளும் அ.தி.மு.க. அரசு எதிர்க்கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் தராமல் நிதிஒதுக்கீட்டில் பாரபட்சம் செய்கின்றனர். அரசு நிகழ்ச்சிகளில் சாதிய பாகுபாடுகள் கூடாது. மக்கள் மன்றத்திலும் இதனை முன்வைத்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் மல்லிகா, விஜயா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பூங்கொடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News