செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 203 ஆக உயர்வு

Published On 2020-07-15 09:45 GMT   |   Update On 2020-07-15 09:45 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் இறந்த நிலையில், 96 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 92 பேர் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1 வயது சிறுவன் உள்பட மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சிறுவன் சேந்தமங்கலம் துத்திக்குளம் பகுதியை சேர்ந்தவன். இதேபோல் நாமக்கல் அன்புநகரை திட்டம்-2 பகுதியை சேர்ந்த 47 வயது பெண், 20 வயது வாலிபர், புதுப்பட்டி எஸ்.பி.எஸ். நகரை சேர்ந்த 18 வயது இளம்பெண், 32 வயது ஆண், 14 வயது சிறுவன், 18 வயது வாலிபர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர்குத்திபாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபர், திருச்செங்கோடு தளிகாம்பிகை நகரை சேர்ந்த 29 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, 48 வயது பெண், திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டியை சேர்ந்த 36 வயது ஆண், 21 வயது வாலிபர், திருச்செங்கோட்டை சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்து உள்ளது. இவர்கள் நாமக்கல், சேலம், திருச்செங்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்து உள்ளது. அதே சமயம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News